Last updated: 5 May, 2022

நகரத்தின் பால்வெளி மண்டலம் (கேலக்ஸி) கருத்துரு

புற வளர்ச்சியைப் பொறுத்தவரை, ஆரோவில் 'எதிர்கால நகரம்' அல்லது 'பூமிக்குத் தேவையான நகரம்' என்பதன் முன்மாதிரியாக ஆவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து பணித் துறைகளிலும் எதிர்கால வெளிப்பாட்டுக்கான அழகான நகரங்களை உருவாக்க நம்மை அனுமதிக்கும் என்பதை உலகிற்கு காட்ட விரும்புகிறது, எதிர்காலத்தில் அங்கு மக்கள் மிகவும் இணக்கமாக வாழ விரும்புவார்கள்.

ஆரோவில்லின் 1965 வரைபடத்தில், ஸ்ரீ அன்னை அவர்கள் இந்நகரத்திற்கான அடிப்படை கருத்துருவை வகுத்தார். இந்த வரைபடம் ஆரோவில்லை ஓர் உலகளாவிய நகரமாக மாற்றும் அகக்காட்சியை நிறைவேற்றும் அனைத்து முக்கிய செயல்பாட்டு பகுதிகளையும் வரையறுத்தது. மற்ற விஷயங்களுக்காக, நகரத்தின் புற வளர்ச்சியை மேற்பார்வையிடுவதற்கு பிரெஞ்சு கட்டிடக்கலைஞர் ரோஷே ஆன்ஷே அவர்களை ஸ்ரீ அன்னை அவர்கள் நியமித்து, அப்பணியை அவர் சுதந்திரமாகச் செய்ய அப்பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.

ஆரோவில்லின் மிகவும் குறிப்பிடத்தக்க கருத்துருக்களில் அதன் நகரப் பெருந்திட்டமும் (மாஸ்டர் பிளான்) ஒன்றாகும், அது ஒரு பால்வெளி மண்டல (கேலக்ஸி) வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது – ஒரு பால்வெளி மண்டலத்தில், பல 'புயங்கள்' அல்லது விசைக்கோடுகள் ஒரு மத்திய பிராந்தியத்திலிருந்து சுருளவிழ்வதாகத் தெரிகிறது.

·       இந்நகரின் மையத்தில் "ஆரோவில்லின் ஆன்மாவான" மாத்ரிமந்திர் உள்ளது, இது ஒருவர் அமைதியாக மனத்தை ஒருமுகப்படுத்துவதற்கான இடமாகும். 

·       மாத்ரிமந்திர் தோட்டங்களுக்கு அப்பால் நான்கு மண்டலங்கள் பரந்து அமைந்துள்ளன, அவை ஒவ்வொன்றும் நகர வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சத்தில் கவனம் செலுத்துகிறது:

·       தொழிற்கூட மண்டலம் (வடக்கு)

·       பண்பாட்டு மண்டலம் (வடகிழக்கு),

·       குடியிருப்பு (தெற்கு/தென்மேற்கு) 

·       பன்னாட்டு மண்டலம் (மேற்கு)

·       நகரப் பகுதியைச் சுற்றிலும் அமைந்துள்ள பகுதி பசுமை வளையப் பகுதி ஆகும். இப்பகுதியில் வனப்பகுதிகள், பண்ணைகள், சரணாலயங்கள் ஆகியவை அமைந்துள்ளன. பசுமைப் பணிகளில் ஈடுபடுவோருக்காக ஆங்காங்கே குடியிருப்புகள் உள்ளன.

1988 மற்றும் 1992இல் ”ஆரோவில் டுடே”-விற்கு அளித்த நேர்காணல்களில், இந்தத் திட்டம் எப்படி உருவானது என்பதை ரோஷே ஆன்ஷே விளக்கினார்.

"ஸ்ரீ அன்னை அவர்கள் இரண்டு அளவுருக்களைக் கொடுத்தார்: நகரத்தை நான்கு பகுதிகளாக, அல்லது மண்டலங்களாகப் பிரித்தல், 50,000 பேர் வசிக்கக்கூடிய நகரமாக அமைத்தல். அதை நான்கு மண்டலங்களாகப் பிரித்தல் (தொழிற்கூட மண்டலம், குடியிருப்பு மண்டலம், பன்னாட்டு மண்டலம், பண்பாட்டு மண்டலம்) தனித்துவமானது, இந்நகரத் திட்டமிடலில் எந்த முன்னுதாரணமும் இல்லை. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், நாங்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் நகரத் திட்டமிடுபவர்கள், அவருக்கு ஆலோசனைகளை வழங்கத் தொடங்கினோம். இது பல கட்டங்களில் செய்யப்பட்டது, இறுதியாக பால்வெளி மண்டலம் (கேலக்ஸி) உருவானது, இதன் முன்மாதிரி திட்டம் அன்னையிடம் அளிக்கப்பட்டது. அவரின் அளவுருக்களுக்கு பதில் அளிக்கும் திட்டமாக இது இருந்ததால், இதை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் இப்பணிக்கு ஊக்கமளித்து வழிகாட்டினார். நான் ஆரோவில் பற்றி ஒருநாள் அன்னையிடம் பேசியபோது, ​​ஏற்கனவே ஒரு சூட்சும நிலையில் அந்த நகரம் இருப்பதாக அவர் கூறினார். இது ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது, அது பூமியில் இறங்குவதற்கு, அதை கீழே இழுப்பது மட்டுமே அவசியம்."

பால்வெளி மண்டலத் திட்டம் நான்கு மண்டலங்களைக் காட்டுகிறது, அவை 'கிரவுன்' (கிரீடம்) மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன, இது மாத்ரிமந்திரைச் சுற்றியுள்ள இரண்டாவது வட்டச் சாலையாகும். கிரவுனில் இருந்து, உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாக பன்னிரண்டு சாலைகள் வெளிப்புறமாக வெளிப்படுகின்றன. அவற்றில் சில தொடர்ச்சியான உயரமான கட்டிடங்களுடன் உள்ளன, அவை நகரத்தின் கட்டமைப்பிற்கும் நகர மையத்திற்கான அனைத்து அணுகலையும் ஒருங்கிணைப்பதற்கும் அவசியமான “விசைக்கோடுகள்“ ('லைன்ஸ் ஆஃப் ஃபோர்ஸ்') என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இத்திட்டம் முடிக்கப்படவில்லை. மாறாக, நகரம் இன்னும் கண்டுபிடிக்கப்பட உள்ளது, ஆரோவில்வாகளின் தினசரி அனுபவம் மற்றும் ஒத்திசைவின் மூலம் எல்லாம் இன்னும் செய்யப்பட வேண்டும். இந்த “விசைக்கோடுகளைத்“ ('லைன்ஸ் ஆஃப் ஃபோர்ஸ்') தவிர, அனைத்தும் நெகிழ்வானவை, எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை."

மேலும் தகவலுக்கு கட்டிடக்கலை மற்றும் நகரத் திட்டம் பற்றிய பகுதியைப் பார்க்கவும்.