Last updated: 19 Aug, 2021

ஆரோவில் - A to Z

ஆரோவில் பற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ள விரும்பும் முக்கியத் தகவல்களை இங்கு சுருக்கமாக அளித்துள்ளோம்.

 

குறிப்பு:. பொதுவாக எல்லாத் தகவல்களையும் நாங்கள் அளித்திருந்தாலும், நிச்சயமாக இன்னமும் தங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கும். அக்கேள்விகளை info@auroville.org.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். இதற்கிடையில், சில பொதுவான தகவல்களை இங்கே காணவும் (தலைப்புகள் அகரவரிசையில் உள்ளன; மதராஸ் என்பதன் புதிய பெயர் சென்னை)

 

கணக்குப்பதிவு (Accountancy)

வணிக நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் சேவை நிறுவனங்கள் யாவும் தங்களது கணக்குகளை பராமரிக்கவும், ஆண்டு இருப்புநிலை கணக்கைத் தயாரிப்பதற்கும் பொறுப்புவகிக்கிறார்கள். பிறகு அவை சான்றிதழ்பெற்ற ஆடிட்டரால் கணக்குத் தணிக்கை செய்யப்படும். கணக்குகள் மற்றும் இருப்புநிலை கணக்குகள் யாவும் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அவர்களால் சரிபார்க்கப்படும், மேலும் இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க, ஆரோவில் நிறுவனத்தின் (தனிக் குறிப்பை பார்க்கவும்) கீழுள்ள அனைத்து நிறுவனங்களின் தணிக்கைச் செய்யப்பட்ட இருப்புநிலைக் கணக்குகள் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும்.

 

நாடாளுமன்றச் சட்டம் (Act of Parliament)

பார்க்கவும் Auroville Foundation 

 

விமான நிலையம் (Airport)

பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் வந்துசெல்லும் வசதி சென்னையில் உள்ளது. அங்கிருந்து பயணிகள் ஆரோவில்லிற்கு வந்துபோவதற்கான வசதிகள் உள்ளன. புதுச்சேரியில் ஒரு சிறிய விமானநிலையம்  உள்ளது. தற்போது பெங்களுர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு அங்கிருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

மதுபானங்கள் (Alcohol)

ஆரோவில்லில் மதுபானங்களைப் பயன்படுத்தக் கூடாது. இந்நகரத்தில் மது விற்பனை கிடையாது.

 

மாற்று ஆற்றல் அமைப்புகள் (Alternative energy systems)

இந்தியாவிலேயே, ஆரோவில்லில் மாற்று ஆற்றல், பொருத்தமான ஆற்றல் ஆகியவற்றில் அதிக அளவு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அவற்றுள், சூரியசக்தி, காற்று, சாண எரிவாயு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி செய்யும் திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.  குறிப்பாக, சோலார் கிச்சன் மேல்கூரையில் 15 மீட்டர் விட்டத்தில் பெரிய அளவில் சூரியசக்தி மின்தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன, தினமும் 1000 பேருக்கு உணவு தயாரிக்க நீராவியை உற்பத்தி செய்வதற்கு ஏற்ப அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.  மேலும், மாத்ரிமந்திர் சூரிய மின்நிலையம் இந்தியாவிலேயே மிகப்பெரிய  தனித்தியங்கக்கூடிய ஓர் அமைப்பு என கருதப்படுகின்றது. அது 484 ஒளிமின்னழுத்த தொகுதிகளுடன், 36.3 கிலோவாட் திறன் கொண்ட அமைப்பாகும். ஆரோவில்லில் 750 வீடுகள் மற்றும்/அல்லது அலுவலகம் முற்றிலும் அல்லது பெரும்பாலும் சூரியசக்தி மின்சக்தி மூலம் இயங்குகின்றன. “காற்றாலை மின் உற்பத்தியைப்” (“Wind energy generators”) பார்க்கவும்.

 

ஆம்புலன்ஸ் (Ambulance)

பொதுவாக ஆரோவில்வாசிகள், புதிதாய்ச்சேர்ந்தோர், பதிவு செய்யப்பட்ட விருந்தினர்கள் (செல்போன் - 94422-24680) ஆகியோரின் உதவிக்காக, ஆரோவில் ஆம்புலன்ஸ் 24 மணிநேரமும் கைலாஷ் கிளினிக்கில் இருக்கிறது. பயனர்களின் சக்திக்கு ஏற்பவும், பயண தூரத்திற்கு ஏற்பவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  

 

ஆம்பித்தியேட்டர் (Amphitheatre)

ஆரோவில்லின் மையத்தில் மாத்ரிமந்திர் மற்றும் ஆலமரம் அருகில் இது அமைந்துள்ளது. 28.02.1968 அன்று ஆரோவில்லின் தொடக்கவிழாவில், அவ்விடத்தில் உள்ள வெள்ளை நிற பளிங்கு கற்களால் ஆன தாமரை மொட்டு வடிவத்தில் அமைந்துள்ள தாழியுனுள், 124  நாடுகளில் இருந்தும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட ஒரு கைப்பிடி அளவு மண் இடப்பட்டது. ஆம்பித்தியேட்டரில் ஆரோவில் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினங்களில் (முறையே பிப்ரவரி 28,  ஆகஸ்டு 15 ஆகிய நாட்களில்) பராம்பரியமாக டான் ஃபையர் உடன் அமைதியான கூட்டுத்தியானம் நடைபெறும். அக உணர்வு மற்றும் மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற கூட்டு நிகழ்வுகளுக்காகவும் அவ்விடம் அவ்வப்போது பயன்படுத்தப்படுகிறது.

 

விலங்குகள் பாதுகாப்பு (Animal care)

ஈடுபாடுள்ள ஓர் ஆரோவில்வாசிகள் அணி உள்ளூர் செல்லப்பிராணிகளுக்கு, குறிப்பாக நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி போடுதல், அவற்றுக்கான சிகிச்சைகள் அளித்தல் ஆகியவற்றின் மூலமாக அவற்றின் சுகாதாரத்தை மேம்படுத்த பணியாற்றி வருகின்றது.  உதவி தேவைப்படுவோருக்கு இலவசமாக கருத்தடைச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  பராமரிக்கப்படாமல் கைவிடப்படும் நாய்கள் மற்றும் பூனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முயற்சி எடுத்து வருகின்றது.  

 

தகுந்த தொழிட்நுட்பம் (Appropriate Technology)

மாற்று தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்திவரும் பல வர்த்தக நிறுவனங்கள் ஆரோவில்லில் உள்ளன. உதாரணமாக, ஒரு நிறுவனம் காற்றலைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. மற்றொன்று சூரியச்சக்தி  மின்விளக்கு அமைப்புகள், பம்புகள், வாட்டர் ஹீட்டர்கள் ஆகியவற்றை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது. இரண்டாவது நிறுவனம், இந்தியா முழுவதும் உள்ளூர் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து,  வடிவமைப்பு/ ஆலோசனை வழங்குதல், குடிநீர் மற்றும் கிராமப்புற மின்மயமாக்கல் போன்றவற்றுக்கு அமைப்புகளை விநியோகம் செய்தல் மற்றும் நிறுவதல் ஆகியவற்றைச் செய்து வருகின்றது.

 

நடுவர் தீர்ப்பாயம் (Arbitration)

சச்சரவுக்கு தீர்வு காணுதல்என்பதைப் பார்க்கவும்.

 

தொல்பொருளியல் (Archaeology)

ஆரோவில் பகுதியில் கட்டடங்களைக் கட்டுவதற்கு தோண்டும்போது, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பல தொன்மையான இடங்கள் வெளிப்பட்டன. அப்போது பல கலைப்பொருட்கள் கிடைத்தன. தற்போது பாரத் நிவாஸில் உள்ள சிறிய தொல்பொருளியல் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. (“பண்பாட்டு அரங்கங்கள்என்பதைப் பார்க்கவும்.)

 

கட்டடக்கலை (Architecture)

ஆரோவில்லில் 40-க்கும் மேற்பட்ட கட்டடக்கலைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கட்டடக்கலையில் பல்வேறுவகையான, புதுமையான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறார்கள். கட்டிடங்களை கட்டுவதற்கு அழுத்தப்பட்டு உறுதியாக்கப்பட்ட மண் கட்டித் தொழில்நுட்பமும், ஃபெரோசிமெண்ட்  தொழில்நுட்பமும் (கூரைகள் முதலியன) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

ஆவணக்காப்பகம் (Archives)

ஆரோவில் ஆவணக்காப்பகம், பாரத் நிவாஸில் அமைந்துள்ளது, அனைத்து முக்கியமான ஆவணங்களும் அங்கு பாதுகாத்து வைக்கப்படுகின்றன. கடிதங்கள், புகைப்படங்கள், ஆரோவில்லின் தொடக்க காலம் முதல் தற்போது வரையுள்ள வளர்ச்சி தொடர்பான ஆடியோ/வீடியோக்கள் இங்கு கிடைக்கும்.

 

பரப்பளவு (Area)

நகரப் பகுதி மற்றும் பசுமை வளையப் பகுதியைச் சுற்றி திட்டமிடப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பு 3,930 ஏக்கர் ஆகும் (1,620 ஹெக்டேர்கள், அல்லது சுமார் 20 சதுர கி.மீ). அவற்றுள் நகரப் பகுதி சுமார் 1,150 ஏக்கர் அளவிலும், பசுமை வளையப் பகுதி சுமார் 2780 ஏக்கர் அளவிலும் அமைந்துள்ளது.

 

ஆரோவில்லுக்கு வருகை (Arrival in Auroville)

இந்தியர் அல்லது வெளிநாட்டவர் யாவரும் ஆரோவில்லிற்கு வந்தவுடன், அவர்கள் தங்கியிருக்கும்  விருந்தினர் இல்லம், ஆரோவில் விருந்தினர் சேவை அல்லது நிதிச்சேவை அலுவலகத்தில் உடனடியாக  வருகைப்பதிவு படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும். வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும்  ஆரோவில்வாசிகளுக்கும் இது பொருந்தும் (ஆரோவில்வாசிகள் சேவை அலுவலகத்தில் பதிவு செய்யப்படும்). “விருந்தினர் பதிவுசெய்தல்மற்றும் குடியிருப்பு அனுமதிபோன்ற ஆவணங்களை காண்க.

 

ஆசிரமம் (Ashram)

ஆரோவில் நகரத் திட்டம் முற்றிலும் தனிப்பட்ட அமைப்பாகும். இதை பாண்டிச்சேரி, ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஒருங்கிணைந்த யோக இலக்குகளை அடைவதற்கான ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்வதாலும், இரண்டு அமைப்புகளின் குடியிருப்பாளர்களுக்கு இடையில் நல்ல தொடர்பு இருப்பதாலும், ஆரோவில் மற்றும் ஆசிரமத்திற்கு இடையிலான உறவு மிக நெருக்கமாக உள்ளது.   

 

சொத்துகள் மேலாண்மை (Assets management)

ஆரோவில்லின் நிலம், கட்டிடங்கள் மற்றும் பிற நிலையான சொத்துகள் சம்பந்தப்பட்ட அனைத்தும் நிதி மற்றும் சொத்துக்கள் மேலாண்மை அவையின் மேற்பார்வையில் நடக்கிறது.

 

ஜோதிடம் (Astrology)

ஆரோவில்லில் தகுதிவாய்ந்த பல ஜோதிடர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் சிலர் பிறப்பு ஜாதகங்களை தயாரித்து அதற்கான விளக்கத்தை அளிக்க உதவுகின்றனர். இவர்கள் பற்றிய விபரங்களை குடியிருப்புவாசிகளிடம் விசாரித்து தெரிந்துகொள்ளவும்.

 

ஏடிஎம்மில் பணம் பெறுதல் (ATM cash dispensers)

 

இரண்டு உள்ளூர் கிளைகள் உள்ளன ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ (பார்க்க வங்கிகள் “Banks”) – வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட வளாகங்களுக்கு வெளியே ஏடிஎம் உள்ளது.

 

 

ஆரோகார்டு (Aurocard)

ஆரோவில்லில் பணம் செலுத்துவதற்கு, பணத்திற்குப் பதிலாக பிளாஸ்டிக் ஆரோகார்டு வழங்கப்படுகிறது. இக்கார்டைப் பயன்படுத்தி அனைத்து பெரிய விருந்தினர் இல்லங்கள், உணவகங்கள், கடைகளில் ஒரு மின்னணு ‘ரீடர்(‘reader’) மூலம் பணம் செலுத்தலாம். பொதுவாக இந்த அட்டை விருந்தினர்கள் தங்கியிருக்கும் விருந்தினர் இல்லங்களில் வழங்கப்படும். நிதிச்சேவை அலுவலகங்களிலும் பெறலாம். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு கூட தங்கும் விருந்தினர்கள் விரும்பினால் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான விருந்தினர் இல்லங்கள் ரூ. 500 டெபாசிட் பெற்றுக்கொண்டு ஆரோகார்டை வழங்கும். பணம் செலுத்துவதற்கான மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கான தொகையை, நிதிச்சேவை அலுவலகத்தில் தங்களின் ஆரோகார்டு கணக்கில் செலுத்தவேண்டும். பாண்டிக்கு செல்லும் பஸ், ஆரோவில் நூலகத்தில் இருந்து புத்தகத்தை எடுத்துவந்து படித்தல், ஆரோவில்லின் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்துதல், ஹதயோகா வகுப்புகள்,  நடனம், தற்காப்புக்கலை போன்றவற்றை கற்றுக்கொள்ள இந்த அட்டை தேவைப்படும், பயனுள்ளதாகவும் இருக்கும். முக்கியமாக, ஆரோவில்வாசிகள் அனுபவித்து வரும் பெரும்பாலான வசதிகளுக்கு இதைப் பயன்படுத்தலாம். இந்த அட்டையை எப்போதும் உடன் எடுத்து செல்லவேண்டும்.

 

ஆரோநெட் (Auronet)

ஆரோநெட் சமூக வலைத்தளம் ஆகும். இது ஆரோவில் உள்ளேயும் வெளியேயும்  மின்னணு தகவல் தொடர்பு  வசதி செய்து தருகிறது, மேலும் ஆரோவில்வாசிகள், விருந்தினர்கள் இணையதளத்தை பயன்படுத்துவதற்கும் உதவுகிறது.

 

ஆரோவில்வாசி அந்தஸ்து (Aurovilian status)

ஒருவர் ஆரோவில்வாசிஆக வேண்டுமெனில் நுழைவுச் சேவை அணியின் மேற்பார்வையில் ஆரோவில்லில் சேருவதற்கான செயல்முறையை தொடரவேண்டும். ஒருவர் ஆரோவில்வாசி ஆவதற்கு முன்னால், விருந்தினர் என்ற நிலையில் இருந்து புதிதாய்ச்சேர்ந்தவர் என்ற அந்தஸ்தை நிறைவுசெய்ய வழக்கமாக 15 மாதங்கள் ஆகும். வழக்கமாக, ஆரோவில் நகரத்தில் ஆரோவில்வாசி பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகள் தானகவே ஆரோவில்வாசி அஸ்தஸ்து பெறுவார்கள்.

 

ஆரோவில் பன்னாட்டு மையங்கள் (Auroville International)

உலகம் முழுவதும் 33 நாடுகளைச் சேர்ந்த ஆரோவில்மீது ஆர்வம் கொண்ட மக்கள் குழுக்கள் சேர்ந்து  ஆரோவில் பன்னாட்டு மையங்கள் (9) அல்லது தொடர்பு அலுவலகங்களை (24) அமைத்துள்ளன. இந்த மையங்களும், அலுவலகங்களும் நகர வளர்ச்சிக்காக நன்கொடை மற்றும் பிற உதவி மூலம் உதவி செய்து வருகின்றன. அத்துடன், தங்களது நாட்டில் ஆரோவில் பற்றிய தகவல்களை அளிக்கிறது.

 

விருதுகள் (Awards)

ஆரோவில், குறிப்பாக புதுப்பிக்கவல்ல ஆற்றல், பொருத்தமான கட்டிடத் தொழில்நுட்பம், வடிவமைப்பு,  கட்டுமானம் போன்ற துறைகளில் சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதற்காக, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.

உதாரணமாக, ஏழைகளுக்கான கட்டடக்கலைக்கான ஹாசன் ஃபதி சர்வதேச விருது (Hassan Fathi International Award) இந்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் சிறந்த கட்டிட மையத்திற்கான விருது (Best Building Centre award). அண்மையில் நிறுவனங்களுக்கான புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையில் ஷ்டென் விருது (Ashden Award) ஆகும்.

 

ஆரோவில் நிறுவனம் (Auroville Foundation)

1988ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் ஆரோவில் நிறுவனம் உருவாக்கப்பட்டது, அதில் ஆரோவில் சொத்துகள் அனைத்தும் மனித இனம் முழுமைக்கும் சொந்தம் என்ற நம்பிக்கையுடன் சட்டமாக்கப்பட்டது. அது மூன்று அமைப்புகளைக் கொண்டது முதலாவதாக, நிர்வாகப் பேரவை ஆகும். அதன் செயலர் அவர்கள் ஆரோவில்லில் வசித்து, பணியாற்றி வருகின்றார். ஆரோவில்வாசிகளின் ஒத்துழைப்புடன் நகர வளர்ச்சிக்கான பொறுப்பை நிர்வாகப் பேரவை வகித்து வருகிறது.  இரண்டாவதாக, பன்னாட்டு ஆலோசனைக் குழு; மூன்றாவதாக, ஆரோவில்வாசிகள் அவை. டவுன் ஹாலுக்கு அருகில், ஒரு தனிக்கட்டிடத்தில் ஆரோவில் நிறுவனம் அமைந்துள்ளது. (ஆரோவில் நிறுவனத்தின் மூன்று தனிப்பட்ட அமைப்புகளுக்கு இங்கே பார்க்கவும்).


பேக்கரிகள் (Bakeries)

ஆரோவில்லில் இரண்டு பேக்கரிகள் உள்ளன. டூசர் குடியிருப்புக்கு அருகிலுள்ள பேக்கரி பிரதானமானது, கோட்டக்கரையில் மற்றொன்று உள்ளது - இங்கு ரொட்டி, பிஸ்கட், பிட்ஸா, கேக்குகள் முதலியன கிடைக்கும். இரண்டிலும் ஒரு சிறிய உணவுவிடுதி உள்ளது.

 

வங்கிகள் (Banks)

குயிலாப்பாளையம் கிராமத்தின் முக்கிய வீதியில் இரண்டு வங்கிக் கிளைகள் உள்ளன. இவை வழக்கமான எல்லா வங்கி சேவைகளையும் வழங்கி வருகின்றன.  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (குறிப்பு குறியீடு 03160; ஸ்விஃப்ட் குறியீடு SBININBB474) முக்கிய சாலையில் அமைந்துள்ளது.  திங்கள் வெள்ளி: காலை 9 – பிற்பகல் 3 மணி வரையும், சனி: 9 – 12 மணி வரையும் திறந்திருக்கும். ஐசிஐசிஐ வங்கி, குயிலாப்பாளையத்திலிருந்து பொம்மையர்பாளையம் போகும் வழியில் அமைந்துள்ளது. (குறிப்பு குறியீடு 1631; ஸ்விஃப்ட் குறியீடு ICICINBBXXX) திங்கள் வெள்ளி: காலை 9 – மாலை 6 மணி வரையும், சனி: காலை 9 – நண்பகல் 2 மணி வரையும் திறந்திருக்கும். இரண்டிலும் ஏடிஎம் வசதி உள்ளது. பார்க்கவும். “நிதிச்சேவை”.

 

 

பாரத் நிவாஸ் (Bharat Nivas)

பார்க்கவும் பண்பாட்டு அரங்கம்

 

புத்தகம் விற்பனைக்கடை (Bookshops)

நான்கு ஆரோவில் புத்தகக் கடைகள் உள்ளன. இடையன்சாவடி மற்றும் பார்வையாளர் மையத்திற்கு இடையே ஃப்ரீ லேண்ட் புத்தகக் கடை, பார்வையாளர் மையத்தில் ஆரோவில் பேப்பர்ஸ் புத்தகக் கடை, குயிலாப்பாளையம் முக்கிய சாலையில் தி ஓயாசிஸ் ஆரோவில் புத்திக் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஜானகி அவுட்போஸ்ட் ஆகியவை உள்ளன.  

 

தாவரவியல் பூங்கா (Botanical Garden)

ஆரோவில் பசுமை வளையத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் பெரியளவில் தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுச்சூழல் கல்வி மையம் உள்ளது. 250க்கும் மேற்பட்ட மர இனங்கள் 25 ஏக்கர் தாவரவியல் தோட்டத்தில் நடப்பட்டுள்ளன; 5500 வகை மாதிரிக்கன்றுகள் 10 ஏக்கர் பாதுகாப்பு வனத்தில் நடப்பட்டுள்ளன. மேலும், பசுமைமாறா உலர் வெப்ப மண்டல காடுகளில் தாவர நாற்றங்கால் உருவாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தாவரங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதை ஊக்குவிக்க ஆண்டிற்கு 50,000 நாற்றுகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

 

பட்ஜெட் (Budget)

பார்க்கவும் பட்ஜெட் ஒருங்கிணைப்புக் குழு (பிசிசி)”

 

கட்டிடங்கள்/ கட்டிட கட்டுமானம் (Buildings / building construction)

இப்போது பெரும்பாலும் ஆரோவில்லின் அனைத்து கட்டிடங்களும், சூளை செங்கற்கள் (ஆரோவில்லிற்கு வெளியிலுள்ள ஊர்களில் இருந்து வாங்கப்படுகிறது) அல்லது ஆரோவில்லில் தயாரிக்கப்படும் அழுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட மண்கட்டிகள் (கம்ப்ரஸ்ட் எர்த் பிளாக்) ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டப்படுகின்றன. மேற்கூரை வழக்கம்போல் ஓடுகள் அல்லது வளைவான ஃபெரோசிமெண்ட் கூரைகள், சிலர் இன்னும் கீற்றுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆரோவில்லில்  கட்டிடத்திற்கான “நடைமுறை விதி” ஏதும் இல்லை,  அதேபோல ஆரோவில்வாசிபாணி கட்டிடம் ஏதும் இல்லை. தகுதிவாய்ந்த கட்டிடக்கலைஞர்கள் ஆரோவில்லில் வசித்தும் பணிபுரிந்தும் வருகிறார்கள். பல்வேறுபட்ட வடிவமைப்பு  முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆரோவில் நகரத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிப் பணிகளை நகர வளர்ச்சி அவை (லெவெனிர் டி ஆரோவில்) மேற்பார்வை செய்து வருகின்றது. இந்த அமைப்பிடம் இருந்து கட்டிடத்திற்கான அனுமதியைப் பெறவேண்டும். ஆரோவில்லால் நடத்தப்படும் நிறுவனங்கள் மூலம் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

 

 

பேருந்து சேவை  (Bus service)

பார்க்கவும் போக்குவரத்து

 

வணிகங்கள்

தொழில்/ வணிக நிறுவனங்களைப்பார்க்கவும்

 

வணிக வளாகங்கள் / பூங்காக்கள் (Business premises / parks)

ஆரோவில் பகுதியில் குயிலாப்பாளையம் அருகில் ஆரோலேக் வளாகத்தில் ஒரு சிறிய வணிகப்பூங்கா அமைந்துள்ளது. இங்கே ஆரோவில்லின் பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் சேவைகளும் உள்ளன. அத்துடன் வாரம் முழுவதும் செயல்படும் ஒரு உணவகமும் உள்ளது.  இறுதியாக, நகரின் தொழிற்மண்டலம் (ஆரோஷில்பம்) அதன் அளவிலும் நோக்கிலும் வணிகப்பூங்காவை ஒத்திருக்கிறது. ஆனால் இது முழுமைபெற பல ஆண்டுகள் ஆகும்.

 


 

கார் வாடகை (சுயமாக ஓட்டுவதற்கு) (Car hire (self drive)

இது ஆரோவில்லில் சாத்தியமில்லை, ஆனால், நிறைய டாக்சி சேவைகள் உள்ளன (கடைசிப் பக்கத்தில் பயனுள்ள தொலைபேசி எண்களின்பட்டியலைக் காண்க.) 

 

சாசனம் (Charter)     

28.02.1968 ஆரோவில் தொடக்க விழாவின்போது, நான்கு அம்சங்கள் கொண்ட ஆரோவில் சாசனத்தை,

ஸ்ரீ அன்னை அளித்தார், தொடக்க விழா நிகழ்ச்சியில் இது பல மொழிகளில் வாசிக்கப்பட்டது. இது உள்ளே உள்ள முதல் பக்கத்தில் உள்ளது.

 

குழந்தை பிறப்பு (Childbirth)

ஆரோவில்லில் சாதாரணமான சூழ்நிலைகளில் குழந்தை பிறப்பிற்கு சிகிச்சை அளிக்கும், திறமை பெற்ற, சிறந்த மகப்பேறு குழு உள்ளது. மிகவும் சிக்கலான சந்தர்ப்பங்களில் பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவமனைகளுக்கோ, அல்லது 15 கி.மீ தொலைவிலுள்ள பிம்ஸ் (PIMS) மருத்துவமனைக்கோ கொண்டு செல்லப்படுகின்றனர்.

 

குழந்தை பராமரிப்பு (Childcare)

ஆரோவில்லில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை நன்கு கவனித்துக்கொள்ள உதவ சிறப்பு பராமரிப்புத்தொகைதேவைப்பட்டால் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி, கிண்டர்கார்கார்டன் பள்ளிகள் உள்ளன.

 

பாடகர் குழு (Choirs)

ஆரோவில்லில் நான்கு பாடகர் குழுக்கள் உள்ளன. அவை இரண்டு பெரியவர் குழுக்கள், ஒரு இளைஞர் குழு, ஒரு குழந்தைகள் குழு ஆகும். வழக்கமாக ஒரு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.

 

சினிமா (Cinema)

திரைப்படக் காட்சிகள் என்பதைப் பார்க்கவும்.

 

வகுப்புகள் (Classes)

நடிப்பு, ஏரோபிக்ஸ், நாட்டியம், ஹத யோகா, இக்பானா, தற்காப்பு கலைகள், பிலேட்ஸ், ஹீலிங், மொழிகள் (முக்கியமாக தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு), போன்ற வழக்கமாக நடைபெறும் வகுப்புகளில் கலந்துகொள்ள பல வாய்ப்புகள் உள்ளனஇதன் விபரங்கள், வகுப்பு நடைபெறும் இடத்தில் மற்றும் ஆரோவில்லில் உள்ள அறிவிப்பு பலகைகள் அல்லது வாராந்திர நியூஸ் & நோட்ஸ் அல்லது ஆரோநெட்டில்  வெளியிடப்படும். சாதாரணமாக இதுபோன்ற வகுப்புகளில் விருந்தினர்கள் பங்கேற்க விரும்பினால் அவ்விடங்களையும் பயன்படுத்தும் வசதிகளையும் பராமரிக்க விருந்தினர்கள் நன்கொடைத்தொகைஅளிக்குமாறு எதிர்பார்க்கப்படுகின்றது.

 

தட்பவெட்பநிலை (Climate)

ஆரோவில்லின் தட்பவெட்ப நிலை வெப்பமண்டலம் ஆகும். அதிக ஈரப்பதம் மற்றும் சில சமயங்களில் வெப்பநிலை 40oC (104oF) அல்லது மே/ஜூன் மாதங்களில் இன்னும் அதிகமாக இருக்கும். குளிர் காலத்தில்கூட இரவு நேரங்களில்  வெப்பநிலை 20oC (68oF) என்ற அளவிற்கு அரிதாகக் குறையும். கோடைக் காலங்களில் 30oC (86oF) –க்கு அதிகமாக இருக்கும். டிசம்பர் மத்தியிலிருந்து மார்ச்சு மத்தியில் வரை மிகவும் இதமான பருவக்காலம் ஆகும். அக்டோபர் டிசம்பர் முக்கிய பருவ மழைக்காலம் ஆகும். ஆரோவில் வானிலை தரவு நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட பெய்த மழை அளிவின்படி ஆரோவில்லின் சராசரி மழையளைவு      125 செ.மீ. ஆகும். “வானிலை தரவு” (“Meteorological data”)  என்பதிலும் காணவும்.

 

வர்த்தகம்/ வியாபார நிறுவனங்கள் (Commercial / business units)

ஆரோவில்லில் சுமார் 180 வணிகப் பிரிவுகள், பின்வரும் பொது பிரிவின் கீழ் செயல்பட்டு வருகின்றன: கட்டிடக்கலை & கட்டுமானம், ஆடைகள் மற்றும் பேஷன், மின்னனுவியல் & பொறியியல், உணவு, கைவினைப் பொருட்கள், கடைகள் மற்றும் புத்திக்குகள், சுற்றுலா மற்றும் பல. தற்போது ஆரோவில்லில் செயல்படும் வர்த்தகங்கள் அனைத்தும் ஆரோவில் நிறுவனத்தின் (பவுண்டேஷன்) கீழ் இயங்கவேண்டும். புதிய நிறுவனத்தை தொடங்கவேண்டுமெனில் ஆரோவில் வர்த்தக வாரியம், செயற்குழு மற்றும் நிதிகள் மற்றும் சொத்துக்கள் மேலாண்மைக்குழு (ஆரோவில் நிறுவனத்தின் செயலர் அவர்கள் உட்பட) அனுமதி வழங்கவேண்டும்.

 

தகவல்தொடர்பு வசதிகள் (Communication facilities)

மின்னஞ்சல், இணையதளம், மெசஞ்சர்  சேவை, கைப்பேசி, அஞ்சலகம், தொலைபேசி ஆகிய தனித்தனி தலைப்புகளில்  இதன் விவரங்களை காணவும்.

 

கணினி பயன்பாடு/வசதிகள்/ சேவைகள் (Computer usage / facilities / servicing)

ஆரோவில்லிலும் பள்ளிகளிலும் பரவலாக கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்கள்/ விருந்தினர்கள் ஆரோவில் கணினிகள் அல்லது தங்களது சொந்த கையடக்க கணினிகள் மூலம் மின்னஞ்சல் அனுப்பவும்/வாசிக்கவும் இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு ஆரோவில் உலாவல் மையங்களை (browsing centres) பயன்படுத்தலாம். இந்நகரச் சேவையில் பயன்பெறும் வகையில் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருளை அவர்கள் வாங்கலாம்.

 

 

மாநாடுகள், கருத்தரங்குகள் & பயிற்சிப் பட்டறைகள் (Conferences, Seminars & Workshops)

பல உள்ளரங்கு கூட்டங்கள், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் ஆகியவை ஆரோவில்லில் நடத்தப்படுகின்றன. சில நேரங்களில் சர்வதேச அளவிலோ அல்லது இந்திய அரசாலோ நடத்தப்படுகின்றன

 

சச்சரவுகளுக்கானத் தீர்வு (Conflict resolution)

ஆரோவில்வாசிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை ஆரோவில் அவையின் துணைக்குழு அல்லது சச்சரவுகளுக்குத் தீர்வு காணும் திறமையுள்ள ஆரோவில்வாசிகள் மூலம் தீர்க்கப்படும். மேலே கூறப்பட்ட இரண்டு முறைகளும் தோல்வியுற்றால் சச்சரவுக்கு தீர்வுகாண மீண்டும் முயற்சிக்கப்படும். கிராமவாசிகளைப் பாதிக்கும் விஷயங்கள் ஆரோவில் கிராமத் தொடர்பு குழு அல்லது சேவா மூலம் கையாளப்படும்.   

 

நன்கொடைத்தொகை (Contributions)

ஒவ்வொருவரும் ஆரோவில்லின் வளர்ச்சிக்காக பணமாகவோ, பொருளாகவோ அல்லது வேலை மூலமாக தங்களது பங்களிப்பை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நகரத்தில் நடைபெற்றுவரும் பராமரிப்பு பணிகளுக்காக நன்கொடைத்தொகை அளிக்குமாறு விருந்தினர்களைக் கேட்டுக்கொள்கிறோம். அதே போல் ஆரோவில்வாசிகள், புதிதாய்ச்சேர்ந்தோர்கள் நகரச்சேவைக்கு மாதாந்திர நன்கொடைத்தொகை அளிக்கிறார்கள். “நன்கொடைகள்என்ற தலைப்பின் கீழ் காணவும்.

 

மழலையர் பள்ளிகள் (கிரஷ்) (Crèches)

6 மாதம் - 2½  வயதுக்கு உட்பட்ட ஆரோவில் குழந்தைகளுக்காக டிரான்ஸிஷன் அருகே ப்ரீ கிரஷ் உள்ளது கிண்டர்கார்டன் கிரஷ், நந்தனம் கிரஷ் என இரண்டு கிரஷ்கள் உள்ளன.  இது சென்டர் ஃபீல்டில் அமைந்துள்ளது.

இங்கு  வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பயிலுகின்றனர். இசையம்பலம் (கோட்டக்கரை), குயிலாப்பாளையம், சஞ்சீவி நகர், பொம்மையர்பாளையம் கிராமங்களில் உள்ளூர் கிராமப்புற குழந்தைகளுக்காக ஆரோவில் உதவியுடன் சில பள்ளிகள் செயல்படுகின்றன

 

 

கிரிடிட்  கார்டு மூலம் பணம் செலுத்துல் (Credit Card payment)

ஆரோவில் நிதிச்சேவையில் தற்போது கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். இரண்டு  புத்திக் டி ஆரோவில் (பார்வையாளர்கள் மையம், பாண்டிச்சேரி), மீரா புத்திக் (பார்வையாளர்கள் மையம்),  கல்கி புத்திக் (பார்வையாளர்கள் மையம், பாண்டிச்சேரி), இன்சைடு இண்டியா, தி டிராவல் ஷாப், யாத்ரா நோவா டிராவல்ஸ், பார்வையாளர்கள மையம் உணவகம்.

 

 

கலை நிகழ்ச்சிகள் (“Cultural events”)

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் & கொண்டாட்டத்தில் காணவும்.

 

வாடகை சைக்கிள் (Cycle hire )

பெரும்பாலான பெரிய ஆரோவில் விருந்தினர் இல்லங்கள் தங்கள் விருந்தினர்களுக்காக சைக்கிளை வைத்திருப்பர், அல்லது சில சமயங்களில் மற்ற விருந்தினர்களால் வாடகைக்கு எடுக்கப்படுகின்றது. பார்வையாளர்கள் மையத்திலுள்ள கியோஸ்க்கில் குறுகிய கால வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.  நீண்டகால பயன்பாட்டிற்காக வாங்குதல் - பின்னர் அதையே திரும்பி வாங்கிக்கொள்ளுதல் என்ற திட்டம்  ரேவ்வில் உள்ள ஆரோவேலோவில் உள்ளது. மற்றபடி சோலார் கிச்சன் அருகே உள்ள கியோஸ்க்கில் சைக்கிளைப் பராமரித்துக் கொள்ளலாம்.  

 

சைக்கிள் பாதைகள் (Cycle paths)

ஆரோவில்லில் சைக்கிள் பாதைகள்  படிப்படியாக விரிவடைந்து வருகின்றன. பெரும்பாலும் இப்பாதைகள் சாலையோரம் நிழல் பகுதிகளில் செல்கின்றன. முடிந்தவரை சைக்கிள் ஓட்டுபவர்கள் இப்பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. அவற்றின் தோராயமான வழித்தடங்களைக் காட்டும் வரைபடம் பார்வையாளர்கள் மையத்தில் உள்ள தகவல் மையத்தில் கிடைக்கும்.

 

பால் பண்ணைகள் (Dairies)

பால் விநியோகம் செய்யும் பல சிறிய பால் பண்ணைகள் இந்நகரத்தில் இருக்கின்றன. என்றாலும் பல ஆரோவில்வாசிகள் கிராமங்களிலிருந்தும் பால் வாங்குகின்றனர்.

 

நடனம் (Dance)

பொழுதுபோக்குமற்றும் வகுப்புகள்ஆகியவற்றை பார்க்கவும்.

 

இறப்பு (Deaths)

ஆரோவில்லில் மரணமுற்ற ஆரோவில் குடியிருப்புவாசிகளின் உடலை அவர்களின் விருப்பப்படி (அறிந்திருப்பின்) அல்லது அவர்களின் நெருக்கமானவர் விருப்பப்படி தற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தகனம் அல்லது நல்லடக்கம் செய்வதற்கு ஃபேர்வெல் சேவைக் குழு ‘ உதவி செய்வர்.   

 

முடிவெடுத்தல் (Decision making)

ஆரோவில்லில் அனைத்து கூட்டங்களிலும், சிறிய குழுவாக இருந்தாலும் அல்லது பெரிய அளவில் ஆரோவில்வாசிகள் அவையாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது.  அத்தலைப்பின் கீழ் விவாதிக்கப்பட்டவை அனைத்தும் முழுவதுமாக பரிசீலிக்கப்பட்டு, ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுகிறது. சில சமயங்களில் வாக்கு எண்ணிக்கையும் பயன்படுத்தப்படுகிறது.

 

பல் மருத்துவ வசதிகள் (Dental facilities)

இரண்டு பிரதான கிளினிக்குகள் ஆரோவில்லில் செயல்படுகின்றன, புரொடெக்ஷ்சன் குடியிருப்பில் (முக்கியமாக ஆரோவில்வாசிகளுக்கு, ஆனால் விருந்தினர்களும் சிகிச்சை பெறலாம்), மற்றொன்று சுகாதார மையத்தில் (உள்ளூர் கிராமவாசிகளுக்காக). இந்நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில்  மேலும் 10 துணை கிளினிக்குகள் அமைந்துள்ளன – ஆரோவில் அவற்றுள் பணியாளர்களை நியமித்து, நிர்வகித்து வருகிறது.

 

டெஸ்க் டாப் பப்ளிஷிங் (டிடிபி) பணி (Desk Top Publishing (DTP) work)

உரைநடை சரிபார்ப்பு & தொகுத்தல் போன்ற, சேவைகளை ஆரோலெக் வளாகத்தில் உள்ள பிரிஸ்மா செய்து வருகிறது.  டிடிபி சேவையை அளித்து வரும் மற்றவை - ஆஸ்பிரேஷன் குடியிருப்புக்கு அருகிலுள்ள ஆரோவில் பிரஸ், டவுன் ஹாலில் உள்ள ஏவி டிசைன் சர்வீஸ் ஆகியவை ஆகும்.

 

சலவைச் சேவை (Dhobi service)

சலவைச் சேவை வசதியை பார்க்கவும்.

 

டிஜிட்டல் கேமிரா பதிவிறக்கம் (Digital camera downloading)

மல்டிமீடியா சென்டரில் உள்ள கிராஃபிக் செக்ஷன், குயிலாப்பாளையம் அருகில் ஆரோலெக் வளாகத்தில் அமைந்துள்ள பிரிஸ்மா ஆகியவற்றில் இச்சேவை வழங்கப்படுகிறது.

 

மருத்துவர்கள் (Doctors)

 சுகாதார வசதிகள்” என்பதைப் பார்க்கவும்.

 

 

நன்கொடைகள் (Donations)

ஆரோவில்லுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளை காசோலை, வரைவோலை அல்லது மணியார்டர்  மூலமாக ஆரோவில் யூனிட்டி பண்ட்என்ற பெயரில் அளிக்கவேண்டும். ஆரோவில் யூனிட்டி பண்ட். ஏசியூஆர், (ACUR) ஆரோவில் 605101, இந்தியா, என்ற முகவரிக்கு அதைப் பதிவுத் தபாலில் அனுப்பவேண்டும். நன்கொடை அளிப்பதற்கான நோக்கம் குறித்து அது தொடர்புடைய குறிப்பில் குறிப்பிடவேண்டும். “வரிகள் / வரி விலக்கு” என்பதையும் பார்க்கவும்.  

 

 

 

ஆடைகள்/ உடைகள் (Dress / clothing)

மேற்கத்திய மற்றும் இந்தியர் அல்லாத பெண்கள் உடலை முழுதும் மறைக்கும் வகையில் உடையணியுமாறு வலியுறுத்துகின்றோம். தவறான செய்தியை மற்றவர்களுக்கு அளிக்காமல், தேவையில்லாமல் பிறரின் கவனத்தை ஈர்க்காதபடி, பொதுவாக இந்திய பெண்கள் உடையணிவது போல் உடலை மறைத்து உடையணிவும். இது கடலில் குளிக்கச் செல்பவருக்கும் பொருந்தும், உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான ஒரே நீச்சல் உடையை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்கிறோம். ஆண்கள், குறிப்பாக கோடைக்காலத்தில் ஆரோவில்லில் அரைகால் சட்டை அணிந்தாலும், இந்தியாவில் முழுக்கால் சட்டை அணிந்தால் அதிக மரியாதையை பெறுவா். பருத்தி துணிகள் பொதுவாக குளிர்ச்சியைத் தரும், செயற்கை இழை உடைகளைவிட சௌகரியமாகவும், அடர் நிறங்களைக் காட்டிலும் வெளிர் நிறங்கள் குளிர்ச்சியை அளிக்கின்றன. மழைக்காலங்களில்  மழைக்கோட்டு/ நீர்ப்புகா கையில்லாத மேலாடை/போஞ்சோ (raincoat/cape/poncho), அல்லது ஒரு குடையாவது அவசியம்.

 

போதைப் பொருட்கள் (Drugs)

ஆரோவில்லில் எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்தியச் சட்டத்தின்கீழ் தடைசெய்யப்பட்ட எந்தவொரு போதைப் பொருளையும் வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படமாட்டாது.பொருளாதாரம் (Economy)

இந்நகரத்தினுள் எவ்விதமான பணப்பரிவர்த்தனையும் இன்றி செயல்படுவதே ஆரோவில் பொருளாதாரத்தின் இறுதியான நோக்கமாகும், குறிப்பாக சமூகத்தினரிடையே, இப்பரிசோதனை தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளது. (பார்க்கவும், உதாரணமாக, “புராஸ்பரிட்டி புத்தூஸ்”). ஆரோவில் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நோக்கம் தன்னிறைவு நிலையை அடைவதுதான்.

 

தொகுத்தல் / உரை சரிபார்த்தல் (Editing / text checking)

டெஸ்க் டாப் பப்ளிஷிங் (“Desk Top Publishing”)-இல் பார்க்கவும்.

 

கல்வி (Education)

பெரும்பாலான ஆரோவில் பள்ளிகளில் தேர்வுகள் எதுவும் நடைபெறாது, மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டாது (எனினும், ஃபியூச்சர் பள்ளி பல்கலைக்கழகத்தில் சென்று பயில விரும்புவோர் வெளிப்புற நுழைவுத் தேர்வு எழுத உதவுகின்றது). நியூ இரா மேல்நிலைப் பள்ளி புதிய தேசிய பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது. பொதுவாக கல்வி ஒவ்வொரு குழந்தையின் முழுத் திறனையும் வளர்ப்பதற்கான வழிமுறையாக காணப்படுகிறது, ஒவ்வொருவருக்கும் சுதந்திரத்தையும் வாய்ப்பையும் அளிப்பதன் மூலம் அவன்/அவள் சொந்த தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடைய வழிவகுக்கிறது.  ஆரோவில் முடிவில்லா கல்விக்கான இடமாகக்கருதப்படுவால், பெரியவர்களுக்கான கல்விக்கும் இது பொருந்தும்.  “பள்ளிகள்மற்றும் வகுப்புகள்(“Schools” and “Classes”) என்பதையும் பார்க்கவும்.

 

மின்சாரம் (Electricity)

ஆரோவில் குடியிருப்புகளிலும் பிற கட்டிடங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் சூரியசக்தியால் உருவாக்கப்படும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இன்னும் பெரும்பான்மையான கட்டிடங்கள் த.நா.மி.வா பிரதான மின்இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவ்வப்போது, முக்கியமாக கோடைக்காலத்தில் தொடர்ந்து மின்தடை ஏற்படுகின்றது. அதிகாரப்பூர்வமாக மின்னழுத்தம் 220 வோல்ட்  என அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல சமயங்களில் அந்த அளவைவிட குறைவான மின்னழுத்தமே உள்ளது; எப்போதாவது அதிகமாகவும் உயரும். ஆரோவில்லின் முக்கியமாக தேவையான அனைத்து மின்சார விநியோகம், தேவையான பராமரிப்பு  ஆகியவற்றை ஆரோவில் மின்சாரச் சேவை கண்காணித்து ஒருங்கிணைத்து வருகிறது. ஆரோவில் சோலார் சேவை, சன்லிட் ஃபியூச்சர் போன்ற நிறுவனங்கள் த.நா.மி.வா. மின்இணைப்பு பெறாவதுகளின் தேவைகளை கவனிக்கின்றன. தற்போது தேவையான மின்சாரம் த.நா.மி.வா மின்இணைப்பு மூலம் வழங்கப்பட்டாலும், அனைத்து ஆரோவில்வாசிகள் மற்றும் நிறுவனங்களுக்கு காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

 

மின்னஞ்சல் (E-mail)

டவுன்ஹால், ஆர்கா குடியிருப்பு ஆகிய இடங்களில் கம்பியில்லா இணைப்பு மூலம் செயல்படும் இணையதள வசதி உள்ளது (திறந்திருக்கும் நேரம்: திங்கள் சனி, காலை 9 மணி மாலை 7 மணி வரை). (ஆரோகார்டு மூலம் கட்டணம் செலுத்தவேண்டும்). பெரும்பாலான விருந்தினர் இல்லங்கள், உணவகங்கள் ஆகியவை கம்பியில்லா இணைப்பு மூலமான இணைய வசதியை இலவசமாக அளிக்கின்றன….. ஆரோவில் தொலைபேசி டைரக்டரியில் ஆரோவில் சந்தாதாரர்களின் மின்னஞ்சல் முகவரியும் ஆரோவில் தொலைபேசி பற்றிய விவரங்களும் உள்ள.

 

 

 

வேலை வாய்ப்பு (Employment opportunities)

கனெக்ஷன் என்ற ஒரு சேவை பிரிவு மல்டிமீடியா சென்டரில் உள்ள மனிதவள மேம்பாட்டு அணி அலுவலகத்தில் செயல்படுகிறது ஆரோவில்வாசிகள், புதிதாய்ச்சேர்ந்தவர்களுக்கு ஆரோவில் நகரத்திலுள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அளிக்கின்றதுஆரோவில்லில் அவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை கண்டறியவும், சேவை, நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை கண்டறிவதற்கும் உதவுகிறது. உள்ளூர் கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து சேவா  (SEWA) கவனித்துக்கொள்கிறது.  ஆரோவில்லில் பணிபுரிய ஆர்வமுள்ள  பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் சோலார் கிச்சனில் உள்ள விருந்தினர் சேவை அலுவலகத்தை avguestservice@auroville.org.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறோம், இது தன்னார்வலர்களுக்கான வாய்ப்பு பட்டியலைத் பராமரிக்க உதவுகிறது,  அல்லது www.aurovilleguestservice.org  என்ற வலைதளத்தை பார்க்கவும், படித்துக்கொண்டே வேலை செய்ய விரும்பும் மாணவர்கள்  <study@auroville.org.in> என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

 

பொழுதுபோக்கு (Entertainment)

வழக்கமான திரைப்படக் காட்சிகள், அத்துடன் கூடுதலாக அவ்வப்போது நடக்கும் நாடகம்,  இசை, நடனம்,  குழுவாக பாடுதல்,  கண்காட்சிகள்,  விளக்கக் காட்சிகள், விரிவுரைகள் முதலியன நடைபெறும். இவற்றிற்கான அறிவிப்புகளை நியூஸ் & நோட்ஸ், ஆரோநெட்,  நகரத்திலுள்ள அறிவிப்பு பலகைகளில் காணலாம்.

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental protection) 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு ஆரோவில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது.  அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் அது சுற்றுச்சூழலுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கோணத்தில் ஆராயப்படுகிறது.  குறிப்பாக கழிவுகளை அகற்றுவது கவனமாக கண்காணிக்கப்படுகிறது. ”கழிவுநீர் சுத்திகரிப்பு/ சாக்கடை/ மறுசுழற்சி- இல் பார்க்கவும்.

 

ஆண்கள் மற்றும் பெண்கள் சமத்துவம்  (Equality of the sexes)

ஆண்கள் பெண்கள்  இருவருக்கும் முழுமையான சமத்துவத்தை அளிக்க ஆரோவில் விரும்புகிறது. நடைமுறையிலும் இது நடப்பதாகத் தெரிகிறது, பல பெண்கள் வர்த்தக நிறுவனங்கள் அல்லது சேவைகளுக்கு தலைமை வகிக்கிறார்கள், மேலும் நிர்வாகம்,  நகரச் செயல்பாடு ஆகியவற்றிலும் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள்.  இதேபோல் கிராமங்களில்,  கிராமச் செயல்வழிக் குழு மூலமாக பெண்களுக்கு முழு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிப்பதில் ஆரோவில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்கிறது.      

 

 

மண் அரிப்பைத் தடுத்தல் (Erosion control)

ஆரோவில் முழுவதும் ஓடும் நீரை நிறுத்தி வைக்கும் கரைகள்/ வரப்புகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன,  அத்துடன் ஓடைகள்அரிப்பள்ளங்கள் ஆகியவற்றில் பல தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன,  வை தண்ணீர் வீணாக ஓடுவதை தடுப்பதுடன்,  நீர்கொள்படுகையில்  மீள்நிரப்பு செய்ய உதவுகிறது.  இதிலிருந்து நகரத்திலும், சுற்றுப்புற கிராமங்களிலும் தங்களுக்கு தேவையான நீரை எடுத்துக்கொள்கிறார்கள்.

 

கண்காட்சி தளங்கள்  (Exhibition sites)

ரோலேக் கஃபேடேரியா, பாரத் நிவாஸ்  ‘ஸ்ரீ அரவிந்தர் அரங்கத்தின்நடைவெளியில் உள்ள அறை, “கேலரி ஸ்கொயர் சர்க்கிள்’,  சிட்டாடின்,  பித்தாங்கா,  சாவித்திரி பவன்,  டவுன் ஹால்,  திபெத்தியன் பண்பாட்டு அரங்கம்,  ஆரோவில் பார்வையாளர்கள் மையம் ஆகிய இடங்களில் கண்காட்சிகள் நடத்துவதற்கான வசதி/ இடம் உள்ளது அல்லது பெரும்பாலா கண்காட்சிகள் இங்குதான் நடைபெறுகின்றன.   

பண்ணைகள் (Farms)

ஆரோவில் அதன் உணவுத் தேவையில் தன்னிறைவு அடையுமளவிற்கு இன்னும் போதுமான அளவு உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யவில்லை என்றாலும், ஆரோவில் சமூகத்திற்காக இயற்கைமுறை விவசாயத்தைப் பயன்படுத்தி அரிசி, முட்டைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால்பொருட்களை உற்பத்தி செய்யும் 15 ஆரோவில் பண்ணைகள் உள்ளன. (பெரும்பாலான உணவுப்பொருட்கள் இன்னமும் பாண்டிச்சேரி சந்தையிலிருந்து வாங்கப்படுகின்றன). “எரிபொருள் உற்பத்தி செய்யும் தாவரங்கள்” (“energy plants”) குறித்து ஆய்வு செய்கின்ற ஒரு ‘சிறிய ஆராய்ச்சி பண்ணையும்’உள்ளது, டீசல் என்ஜினில் கரிம எரிபொருளுக்கு மாற்றாக பயன்படக்கூடிய தாவர இனங்களை அடையாளம் காணுவதே இதன் நோக்கமாகும்.

விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் (Festivals & Celebrations)

ஆரோவில்லில் அங்கீகரிக்கப்பட்ட விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பெரும்பாலும் விடுமுறை உண்டு. இது 4 வகைகளாகும்: பொதுவாக ஆரோவில் தொடர்பானவை (உதாரணம். ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஆரோவில் பிறந்த தினம்); இந்திய/தமிழ்ப் பண்பாடு (உதாரணம்; தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு); இந்திய அரசின் (தேசிய விடுமுறைகள்): சர்வதேச விடுமுறைகள் (கிறிஸ்துமஸ், மே தினம், போன்றவை), சர்வதேச பங்களிப்பாளர்களை கொண்டு, இப்போது ஆரோவில்லில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திரைப்பட விழா நடைபெற்று வருகிறது..

திரைப்படக் காட்சிகள் (Film shows)

ஆரோவில்லில் உள்ள பல இடங்களில் திரைப்படங்கள் வழக்கமாக காண்பிக்கப்படுகின்றன, அவற்றில் முக்கியமானவை பாரத் நிவாஸ் அரங்கம், பார்வையாளர்கள் மையம், மல்டிமீடியாவில் மையத்தில் அமைந்துள்ள சினிமா பாரடைஸோ ஆகியவை ஆகும்.

ஆரோவில்லில் படம் எடுத்தல் (Filming in Auroville)

பார்வையாளர்கள்/விருந்தினர்கள் சொந்த நோக்கங்களுக்காக படம் எடுப்பதற்கு இலவசம், ஆனால் பின்னர் பொதுமக்கள் காண்பதற்காக ஆரோவில்லிற்குள் உள்ள எதையும் படமாக்குவதற்கு இந்திய அரசின் அனுமதி அவசியம் (ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், படத் தயாரிப்பாளர்கள் எந்தவொரு தனிநபரிடம், குழுவிடம், நிறுவனத்திடம் படமெடுக்கும் முன்பு அனுமதி பெறவேண்டும்) மேலும் தகவல்கள் பெற outreachmedia@auroville.org.in –ஐத் தொடர்பு கொள்ளவும் அல்லது ஆவணக்காப்பத்தில் உள்ள அதன் அலுவலகத்திற்கு செல்லவும். ஆரோவில்லில் ஏராளமான ஆரோவில்வாசிகள், ஆரோவில் நிறுவனங்கள் காணொளிப் படங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன.

நிதி (Finance)

ஆரோவில்லின் வளர்ச்சிக்கான நன்கொடைத்தொகைகள் இந்திய அரசு, இந்தியா மற்றும் வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், ஆரோவில் பன்னாட்டு மையங்கள், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தனியார் நன்கொடையாளர்கள், ஆரோவில்லின் வணிக நிறுவனங்களின் இலாபங்களிலிருந்து (பொதுவாக மூன்றில் ஒரு பங்கு), ஆரோவில்வாசிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்தும் வருகின்றன, தொடர்ந்து வரும்.

நிதிச் சேவை (Financial service)

டவுன் ஹாலில் இதன் பிரதான அலுவலகம் உள்ளது, ஆஸ்பிரேஷன் அருகிலுள்ள புத்தூஸ் கொள்முதல் சேவைக்கு பக்கத்தில் இதன் கிளை அலுவலகம் உள்ளது. (இரண்டும் காலை 9.00-12.30 மணி வரை, பிற்பகல் 3.00 – 4.30 மணி வரை திறந்திருக்கும்). கணினிமயமாக்கப்பட்ட நிதிச்சேவை உரிய பணவைப்பின்படி ஆரோகார்டை வழங்குகிறது. நிதிச்சேவையில் கணக்குகளை தொடங்குதல் மற்றும் முடித்தல் போன்ற பணிகளை கையாளுகிறது, ‘அந்நியச் செலவாணி பரிமாற்றம்“ சேவையாகவும் செயல்படுகிறது, பயணர்களின் காசோலைக்கு பணமளித்தல், உள் பணப் பரிவர்த்தனைகள்/ கொடுப்பனவுகள் (கிரெடிட் கார்டுகள் உட்பட) ஏற்பாடு செய்கிறது, வெளிநாட்டிலிருந்து வெஸ்டர்ன் யூனியன் மூலமாக செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளையும் கையாளுகிறது, இருப்பினும் பிந்தைய இரு சேவைகளும் டவுன் ஹாலில் உள்ள பிரதான நிதிச்சேவையில் மட்டுமே செய்யப்படும்.

காலணி மற்றும் டார்ச்சு/ஃப்ளாஷ் லைட் (Footwear and flashlights)

குறிப்பாக, இருட்டிய பிறகு நீங்கள் தங்கியிருக்கும் கட்டிடங்களுக்கு வெளியே வெறுங்காலுடன் செல்ல வேண்டாம், பாம்புகள் அல்லது தேள்களிடம் இருந்து தப்பிக்க இரவில் எப்போதும் ஃப்ளாஷ் லைட்/டார்ச்சு லைட் எடுத்துச் செல்லுமாறு மக்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது. காலணிகளை பொதுவாக அனைத்து குடியிருப்பு கட்டிடங்களுக்கு வெளியே விடவேண்டும்; பிற இடங்களில் வேறுபடுகின்றன. மிகவும் பொதுவான காலணிகள் தோல், இரப்பர் அல்லது சின்தெடிக் “செருப்புகள்” (ஓபன் ஃபிலிப் – ஃப்ளோப்ஸ் அல்லது ஸேன்டல்) ஆகியவற்றை காலுறை போடாமல் அணியலாம்.

அந்நியச் செலாவணி (Foreign exchange)

நிதிச் சேவை” அல்லது “வங்கிகள்”- ஐப் பார்க்கவும்.

காடுவளர்ப்பு (Forestry)

ஆரோவில்லின் வனங்களை வனக்குழு கவனித்து வருகிறது, எங்கு எந்தெந்த மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதை தீர்மானித்தல், வனப்பகுதிகளைப் பாதுகாத்தல், அவ்வப்போது வெட்டுவதற்கேற்ற மரத்துண்டுகளை மேற்பார்வை செய்தல். முன்னர் "முற்றிலும் வறண்ட" நிலையில் இருந்த ஆரோவில் நிலங்களை மீண்டும் வனமாக மாற்றியது, இன்றுவரை ஆரோவில்லின் முக்கியச் சாதனைகளில் ஒன்றாகும், இப்போது ஆரோவில் நிலப்பகுதியில் இருபது இலட்சம் மரங்களும் மேலும் இருபது இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மரங்களை உள்ளூர் மக்களுடன் இணைந்து கிராம நிலங்களில் நடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பவுண்டேஷன் (Foundation)

“ஆரோவில் பவுண்டேஷன்” -ஐப் பார்க்கவும்.

அனைவருக்கும் இலவசம் (ஃப்ரீ ஃபார் ஆல்) (Free for all)

ஒரு பொதுக் கொள்கையாக, ஆரோவில் அதன் குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் பணிக்கும், ‘நகரச் சேவைகளுக்கு’அளிக்கப்படும் மாதாந்திர நன்கொடைத்தொகைகள் ஆகியவற்றுக்கு ஈடாக முடிந்தவரை இலவச வசதிகளை வழங்க முயலுகிறது. இதில் கலாச்சார நிகழ்வுகள், அடிப்படை சுகாதாரப் பாதுகாப்பு, விளையாட்டு வசதிகள், கல்வி, யோகா, நடனம் போன்ற வகுப்புகளும் அடங்கும். சுயநிதி ஆதாரங்கள் இல்லாத ஆரோவில்வாசிகளை ஆரோவில் சமூகம் கவனித்துக் கொள்கிறது, மகப்பேறு, பிரிட்ஜிங் ஃபண்டு, இயலாதவர்கள் என தேவைப்படுவோருக்கு உதவி வழங்கப்படுகிறது. ‘ஃப்ரீ ஸ்டோர்’ தேவைப்படுபவர்களுக்கு ஒருமுறை பயன்படுத்திய (மற்றும் புதிய) ஆடைகளை இலவசமாக வழங்குகிறது.

ஆரோவில்லின் நண்பர்கள் (Friends of Auroville)

ஆரோவில்லுக்கு உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான “நண்பர்கள்”உள்ளனர் என்று சொல்வது நியாயமாக இருந்தாலும், இந்நகர குடியிருப்பாளர்கள் நன்கு அறிந்த, தொடர்ந்து ஆரோவில்லுக்கு வருகைதரும் வழக்கமான பார்வையாளர்கள் போன்ற ஒரு சிறு எண்ணிக்கையிலான மக்களை அடையாளம் காண 'ஆரோவில்லின் நண்பர்கள்' என்ற அதிகாரப்பூர்வமான வார்த்தையை ஆரோவில்லின் நுழைவுச்சேவை பயன்படுத்துகிறது. இவர்கள் திட்ட வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவுவதில் தங்களை அர்ப்பணித்துள்ளனர்; ஆரோவில் நகரச்சேவைகளின் நிதிக்கு ஆரோவில் குடியிருப்பாளர்கள் அளிப்பதுபோல் வழக்கமான நன்கொடைத்தொகைகளை அளிக்கிறார்கள்; மேலும் ஆரோவில்லில் ஒரு வீட்டை கட்டுவதற்காக நிதியளித்துள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த ஊரிலோ அல்லது நாட்டிலோ இருக்கும்போது, ஆரோவில்வாசிகளுக்கு அவர்களின் வீட்டை ஒதுக்கீடு செய்வதற்கு வீட்டுவசதிச் சேவையிடம் மகிழ்ச்சியுடன் ஒப்படைத்து விடுகிறார்கள். அவர்கள் ஆரோவில்லுக்கு வருகை தரும்போது அவ்வீடு அவர்களுக்கு கிடைக்கும்.

நிதி திரட்டல் (Fundraising)

ஆரோவில்லுக்கு ஆதரவாக தொழில்முறை ரீதியில் பொதுநிதி திரட்டும் திட்டம் எதுவும் இல்லை, இருப்பினும் நிலம் வாங்குதல், மாத்ரிமந்திர், நகர வளர்ச்சி, கல்வி, பல்வேறு சுற்றுச்சூழல் திட்டங்கள், கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பிறவற்றிற்கு ஆதரவாகவும், 50,000 குடிமக்கள் வசிப்பதற்கேற்ற ஒரு நகரத்தை உருவாக்குவது தொடர்பான தேவைகள் என பல்வேறு தற்காலிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.